Sunday, December 15, 2013


மக்கள் தீர்ப்பே மகேஸ்வரன் தீர்ப்பு' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதேபோல், "மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை' என இன்னொரு பழமொழியும் உண்டு. இந்த இரண்டு பழமொழிகளும் மக்களை கடவுளின் நிலைக்கு உயர்த்திப் பார்க்கின்றன. சைவ மதத்தைப் பொறுத்தவரையில் அவர்களின் முழுமுதல் கடவுள் சிவபெருமான். அந்த சிவபெருமானைத்தான் மகேஸ்வரன் என்று அழைப்பர். அதாவது, தங்கள் முழுமுதல் கடவுளுடன் மக்களை ஒப்பிடும் ஓர் உயர்ந்த கலாசாரத்தை தமிழ் மக்கள் கொண்டுள்ளனர். இரத்த ஆறு தமிழ் மண்ணில் கரைபுரண்டு ஓடிய பின்பும் மக்களின் மனம் அதில் அடியுண்டுபோக மறுத்துவிட்டது. இதுதான் வட மாகாண சபைத் தேர்தல் முடிவு உலகிற்குச் சொல்லும் செய்தி. தமிழ் மக்களின் பிறப்புரிமையை ஏற்றுக்கொண்டு அத்தகைய உரிமைகளால் வென்றெடுக்கப்படவேண்டிய அவர்களின் இதயங்கள் பீரங்கிகளினாலும், வெடிகுண்டுகளினாலும் விமானக் குண்டுகளினாலும் துப்பாக்கிச் சன்னங்களினாலும் ஆழமான வடுவுக்கும் காலத்தால் ஆறாத புண்ணுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன. அந்த இரத்தம் தோய்ந்த வடுவையும் ஆறா புண்ணையும் மக்கள் வாக்குச்சீட்டின் மூலம் தீர்ப்பாய் அளித்துள்ளனர். பீரங்கி குண்டுகளுக்கு முன்னால் பணிய மறுத்த அவர்களின் இதயத்தின் பெருமை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்படும்.  அமைதியும் சமாதானமும் வளர்ச்சியும் பொருந்திய ஓர் ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்குவதற்கான முயற்சியில் முழுமுதல் முன்னோடிகளாய் தமிழ்த் தலைவர்கள் திகழ்ந்தனர். முழு இலங்கைக்கும் விடுதலை வேண்டுமென்று கூறி முதல் முறையாக ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை சேர் பொன்னம்பலம் அருணாசலம் 1919 ஆம் ஆண்டு ஆரம்பித்து அதற்கான முதலாவது தலைவராகவும் செயற்பட்டார். கொழும்பை தலைநகராகக் கொண்ட ஒரு நவீன  பல்லின சமூகத்தை உருவாக்கும் பாதையில் கொழும்பு மேற்கில் ஒரு தமிழ்த் தொகுதியை உருவாக்க வேண்டுமென்ற அவரது கோரிக்கையை முதலில் நியாயபூர்வமாக ஏற்றுக்கொண்ட ஜேம்ஸ் பீரிஸ் போன்ற சிங்களத் தலைவர்கள் பின்பு அதனை மறுத்தபோது அருணாசலம் மனமுடைந்து பின்வாங்கினார். பல்லின சமூகத்தை கட்டியெழுப்பும் பாதையில் பல அங்கத்தவர் தொகுதி இந்த அடிப்படையில் உருவாக்கப்படுவது இயல்பு. ஆனால், பல்லினத் தன்மை பொருந்திய இந்த யதார்த்தத்தை சிங்களத் தலைவர்களோ முற்றிலும் இனவாத கண்கொண்டு நிராகரித்துள்ளனர். அந்த மன அமைப்புத்தான் முள்ளிவாக்ய்கால் வரையான எங்களுடைய இன அழிப்பின் நீட்சியாகும். தலைவனை, அரசியல் மேதையை அல்லது தலைவர்களை இலங்கையின் அரசியல் வரலாறு இன்னும் கருத்தரிக்கவில்லை. 

இலங்கையில் ஆட்சிபீடமேறிய அனைத்து தலைவர்களும் சிங்கள இனத்தவர்களுக்கான தலைவர்களாக இருந்துள்ளார்களே தவிர, பல்லினங்களையும் அரவணைத்த, பல்லின மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட, ஒரு நவீன தேசத்தை உருவாக்குவதற்கான தலைவர்களாக இருக்கவில்லை. ஜனநாயகத்தைப் பற்றி அதிகம் பேசுவோர் வட மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பெரிதும் கண்டுகொள்வதாய் இல்லை. அவர்கள் ஜனநாயக முறையில் தமது தேசிய தனித்துவத்திற்கான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். தமிழ் மக்களுக்கு என்ன வேண்டுமென்பதை சிங்கள மக்களின் வாக்குகளால் நிர்ணயிப்பது ஜனநாயகமாகாது. தமிழ் மக்களின் விருப்பங்களை தமிழ் மக்களின் வாக்குகளால் நிர்ணயிப்பதுதான் ஜனநாயகம்! யாரும் எழுமாத்திரமாய் நினைப்பதுபோல் இராணுவ வெற்றிகளோடு தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டுவிடுமென்றால் அது தவறு. சிங்கள பண்பாடு, சிங்கள நுண்கலை, கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்ற சிங்கள கலை, கலாசார வளர்ச்சிக்கெல்லாம் தமிழ்ச் சமூகம் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. நவீன வரலாற்றின் சிங்கள ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை என்பனவற்றை நவீன உலகிற்கு பெரிதும் அறிமுகப்படுத்தியவராக கலாயோகி ஆனந்த குமாரசுவாமி விளங்கினார். நவீன இலங்கையின் நிர்வாக கட்டமைப்பை வளர்த்ததிலும்  நவீன இலங்கையின் வளர்ச்சியிலும் தமிழரின் மூளைக்கும் உழைப்பிற்கும் மிகப்பெரிய பங்குண்டு. இலங்கையின் தேசிய வருமானத்தை முதுகெலும்பாய் தூக்கி நிறுத்தியவர்கள் மலையக தமிழ் மக்கள். தமிழ் மக்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இலங்கையின் வளர்ச்சிக்கு பெரிதும் ஊன்றுகோலாய் அமைந்தன என்பதை சிங்கள மக்களும் சிங்கள தலைவர்களும் புரிந்துகொள்வதாய் இல்லை. மாறாக, தமிழ் மக்களை படுகொலை செய்வதன் மூலம் அவர்கள் சாதிப்பது இலங்கைத் தீவுக்கு அபகீர்த்தியை தேடுவதைத் தவிர வேறொன்றுமில்லை. சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீகுவான்யூ இது தொடர்பாக ஆழமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

ஈழத்தமிழரின் உழைப்பும் மூளையும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற தேசங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. அப்படிப்பட்ட ஈழத் தழிழரை அரவணைத்து ஒரு வளம் பொருந்திய நவீன இலங்கையை கட்டியெழுப்ப சிங்களத் தலைவர்கள் தவறிவிட்டனர்.   அது பண்பாட்டு வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான போராட்டமாகும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தொன்மையும் வரலாற்றுப் புகழும் மிக்க அவர்களது செம்மொழியும் அவர்களுக்கு புனிதமானதும் மேன்மையானதுமாகும். குடும்பப் பற்று மிக்க அவர்களது தனித்துவமான வாழ்க்கை முறையும் அவர்களுக்கு உன்னதமானவையாகும். ஆதலால் அவர்கள் தனது மொழி, பண்பாட்டு வாழ்க்கை முறையையும் ஒருபோதும் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். அரச போஷிப்பற்ற, புறக்கணிக்கப்பட்ட கூடவே ஒடுக்குமுறைக்குள்ளான மண்ணில் வாழும் மக்கள் தனது சுயமுயற்சியினால் முன்னேறிக் காட்டிய வரலாற்றைக் கொண்டவர்கள். எமக்கென்று ஓர் அரசு இருந்திருந்தால், கடந்த 50 ஆண்டுகளில் நாம் ஜப்பானுக்கு நிகரான பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தப் பூமியில் நிரூபித்துக் காட்டியிருப்போம். எமது வளர்ச்சி தடைப்பட்டிருப்பதற்கு இன ஒடுக்குமுறை முழுமுதல் காரணமாகும். இன ஒடுக்குமுறையிலிருந்து நாம் விடுதலை பெறுவதன் மூலம்தான் நாம் வளர்ச்சியடைய முடியும். நாம் போராடுவது சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல. மாறாக, எமது வளர்ச்சிக்குத் தடையான இன ஒடுக்குமுறையை அகற்றுவதற்காகத்தான். எங்கள் பிள்ளைகள் வீடற்றவர்களாய், நாடற்றவர்களாய் புவிப்பரப்பின் நாலாபுறங்களில் சதாழைகள் போல எங்கும் அடியுண்டு அலைகிறார்கள். கடல் பரப்பில் காவுகொள்ளப்படுகிறார்கள். வாழ்வை இழந்து, நம்பிக்கைகளை இழந்து நடைப் பிணங்களாய் அலைகிறார்கள். இதற்கெல்லாம் ஓரினத் தன்மை கொண்ட இலங்கை அரசின் ஒடுக்குமுறையே காரணமும் பொறுப்புமாகும். 

தமது பிள்ளைகளும்  பிள்ளைகளின் பிள்ளைகளும் தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் வாழ நாம் வழிசெய்ய வேண்டிய பொறுப்புள்ளவர்களாவோம். எங்கு ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கு மக்கள் அதிலிருந்து விடுபடப் போராடுவார்கள். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவில் இன ஒடுக்குமுறை இறுதி வெற்றிபெற முடியாது என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். ஈழத்தமிழர் வாழும் பகுதி தரைவழியால் பூட்டப்பட்ட ஒரு டூச்ணஞீடூணிஞிடுஞுஞீ அல்ல. அதன் கேந்திர முக்கியத்துவம் அதற்கு இளமை குன்றாத கவர்ச்சியை என்றும் கொடுக்கின்றது. ஆதலால் ஒடுக்குமுறையை சாத்தியப்படுத்திவிடலாம் என்று எண்ணுவது தவறு. நேற்று குண்டுகளால் வீழ்த்தப்பட்டோம்.  ஆனால், இன்று வாக்குகளால் எழுந்து நிற்கிறோம். வாக்குகள் எமது நீதியை, நியாயத்தை வெளி உலகுக்கு பறைசாற்றுகின்றது. இன ஒடுக்குமுறை தோல்வியடையும் யுகம் இது. தமிழ் மக்கள் தமது அடிமன அபிலாசைகளை வாக்குகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமது தலையில் பெரும் பொறுப்பை சுமத்தியிருக்கிறார்கள். அரசாங்கத் தரப்பினர் வளர்ச்சிக்காக தமக்கு வாக்களிக்குமாறு தமது அனைத்து அரச வளங்களையும் திரட்டி, பிரசாரம் செய்தபோதிலும் அனைத்து வளங்களையும் பயன்படுத்தியபோதிலும் மக்கள் கௌரவமும் தனித்துவமும் நிறைந்த வாழ்வுடன் கூடிய தமது கையிலான வளர்ச்சியை வேண்டியே வாக்களித்திருக்கிறார்கள். இந்த அபிலாசையை ஏற்றுக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு நீதிமான்களின் பொறுப்பாகும். 

இந்த அபிலாசைகளை யார் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் டுக்குமுறையாளர்களே ஆவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுதங்களுடன் வந்து உரிமை கோரவில்லை. மாறாக, மக்களின் ஆணையுடன் வந்து உரிமை கோருகிறோம். அதுவும் அரசால் நடத்தப்பட்ட தேர்தலில் மக்கள் அளித்த வாக்கைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை அனைவரும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கள் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்குப் பாத்திரமாக நாங்கள் நடந்துகொள்ள வேண்டியது எங்களது பொறுப்பாகும். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு எங்களுடன் தீர்வைக் காணவேண்டியது அரசின் கடமையாகும். எமக்கான பொறுப்பிலிருந்து நாம் விலகினால் வரலாறு எம்மைத் தூற்றும். அரசு எம்முடன் தீர்வு காணவேண்டிய கடப்பாட்டிலிருந்து தவறினால் இலங்கைத் தீவு வல்லரசுகளின் களமாகும். இலங்கை அரசைப் பொறுத்தவரையில் அது தமிழர்களின் உரிமைகளை ஒடுக்குவதற்காக பெரு வல்லரசுகளின் கால்களில் விழுகிறது. தனது சொந்த மக்களை ஒடுக்குவதற்காக அந்நியர்களின் கால்களில் வீழ்பவன் ஒரு நாள் அந்தக் கால்களாலேயே மிதிபடுபவனாக மாறுவான். எது எப்படி நடப்பினும், எப்படித்தான் வெளி அரசுகளின் உதவி பெற்று ஒடுக்குமுறையை அதிகரித்தாலும் அத்தகைய ஒடுக்குமுறைகளின் விளைவு தமிழரையும்  சிங்களவரையும் இருவேறு பாலங்களாகப் பிளக்கவே உதவும். ஆதலால் எல்லாவற்றுக்கும் தாயான நீதியிலிருந்து பிரச்சினைகளை அணுக ஆரம்பிக்கவேண்டும். மீண்டும் சொல்லக்கூடியது இதுதான். அனைத்து வகையான வளர்ச்சிக்கும் சமாதானத்துக்குமான தாய் நீதிதான். இப்போது அரச கட்டிலில் இருக்கும் தலைவர்கள் நீதியின் பெயரால் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள். அதேவேளை இந்த உலகில் தனி ஒரு தேசமோ அரசோ தனித்து வாழ முடியாது. 

ஒரு அரசு என்பது  ஒரு தேசம் என்பது உலகளாவிய போக்கிலிருந்து பிரிக்க முடியாத பகுதி. அதனால் எமக்கான நீதி, நியாயம் இந்த உலகப் பரப்புக்கு விரியக்கூடியது. இந்தப் பூமிப் பந்தில் நாம் தனித்து விடப்படமாட்டோம். எனவே, உலகளாவிய நீதியின் ஒரு பகுதியாக எமது மக்களும் எமது போராட்டமும் இருக்கும். சிறுபிள்ளைகளின் விளையாட்டுச் சமையல் போன்றதுதான் இந்த மாகாண சபை அமைப்பாகும்.  சிறுபிள்ளைகள் பார்வைக்கு சமைக்கலாம் ,  பாவனையில் சாப்பிடலாம். ஆனால், அது சமையலாகவோ சாப்பாடாகவோ ஆகமுடியாது என்பது எப்படி உண்மையோ அப்படியே அதிகாரமற்ற இந்த மாகாண சபை அமைப்பாகும். ஆகவே, இந்த மாகாண சபையோடு மட்டும் நின்றுவிடாது, நாங்கள் அதனூடாகத்தான் எங்களுடைய தீர்வு முற்றுப்பெற்றதாகக் கருதாது, தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கை அரசு ஒரு முழுமையான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். இன்று வடக்கு, கிழக்குப் பகுதி எங்கும் அரச நிர்வாகத்துறையில் சிங்கள உத்தியோகத்தர்களை நியமித்திருக்கின்றார்கள். குறிப்பாக அரச அதிபர்கள், கணக்காளர்கள் போன்ற உயர் பதவிகளுக்கு அவர்களை நியமிப்பதினூடாக தமிழர்களுடைய நிலங்களில் அவர்களுடைய நிர்வாக இயந்திரங்கள் முடக்கப்படுகின்றன. தமிழர்கள் வாழும் பிரதேசங்களிலே அவர்களுடைய கோவில்கள் உடைக்கப்படுகின்றன. பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் 150 க்கும் மேற்பட்ட பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன. கொடிகாமம்  வரணியிலே இருக்கின்ற 300 ஆண்டுகள் பிரசித்திபெற்ற கண்ணகி அம்மன் ஆலயத்தினுடைய சிலை களவாடப்பட்டிருக்கின்றது.    

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட பல ஆலயங்களுடைய சிலைகள் திருடப்பட்டிருக்கின்றன. ஆகவே, ஆலயங்களை இடிப்பது மற்றும் ஆலயச் சூழல்களிலே இருக்கின்ற வணக்க முறைகளை சிதைப்பதன் மூலம் தமிழர்களுடைய உன்னதமான வணக்க முறைகளுக்குக் களங்கம் ஏற்படுத்தப்படுகின்றது.   இதனைவிடப் பல இடங்களில் எங்களுடைய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. வலிகாமம் வடக்கில் தமிழர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்களுடைய சொந்த நிலங்கள் மற்றும் சொந்த வீடுகள் இடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. அவர்கள் அந்த இடங்களிலே சென்று குடியேறவிடாமல் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சொந்த இடங்களுக்குப் போக முடியாமல் அவர்கள் ஓர் உண்ணாவிரதம் நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதனைவிட வடமராட்சி கிழக்கிலே, மண்டைதீவினுடைய பகுதியிலே, கிளிநொச்சியில், முல்லைத்தீவில், சம்பூரில் தமிழ் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து ண்டிருக்கின்றார்கள். ஆனால், இங்கு இலங்கையிலே அனைத்து மக்களும் குடியேற்றப்பட்டுவிட்டார்கள், அவர்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள், தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், தமிழர்கள் சொந்த இடங்களில் அகதிகளாக வாழ்கின்ற அந்தத் துர்ப்பாக்கிய நிலை இலங்கையில் மட்டும்தான் காணப்படுகின்றது.    வலிகாமம் வடக்கு மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக பல தடவைகள் நாங்கள் இந்தச் சபையிலே பேசியிருக்கின்றோம். பல தடவைகள் கேட்டிருக்கின்றோம். பசில் ராஜபக்ஷ கூடக் குறிப்பிட்டிருந்தார், நாங்கள் சம்பூரிலே மக்களை விரைவாகக் குடியேற்றுகின்றோம் என்று. ஆனால், இதுவரை அந்தச் சம்பூர் மக்கள் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வலிகாமம் வடக்கு மக்கள் நான்கு நாட்கள் உண்ணாவிரதமிருந்தார்கள். அதற்கு முதல் அவர்கள் தொடர்ந்து போராடினார்கள். ஆனால் அவர்களுடைய ஆறாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து இருநூறு பரப்புக் காணிகள் இன்னும் அரச வசம் இருக்கின்றன. 

அவற்றில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன, இராணுவத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே பல ஹோட்டல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன,  ஜனாதிபதிக்கான மாளிகை கூடக் கட்டப்படுகின்றது. ஆனால், அந்த மக்கள் தொடர்ந்தும் அந்த இடங்களிலே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கான ஒரு விடிவு இந்த ஜனநாயக அரசில் எவ்வாறு கிடைக்கும் என்பதைத்தான் அந்த  மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.    இன்னும் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய கேப்பாப்பிலவு மக்கள் தங்கள் சொந்த மண்ணுக்குப் போக முடியாமல் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, குறிப்பாக தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் எல்லாம் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.    இதனைவிடச் சிறையிலே வாடுகின்ற தங்களுடைய பிள்ளைகளை விடுதலை செய்து தாருங்கள் என்று பலமுறை தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள். சிறையிலே ஆயிரக் கணக்கான அரசியல் கைதிகள் வாடுகின்றார்கள். அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுடைய விடுதலை தொடர்பாகப் பலமுறை பேசியும்  இந்த ஜனநாயக அரசிடம் நாங்கள் பலமுறை கேட்டும்கூட அவர்கள் தொடர்பான விபரங்களை இந்த அரசினால் வெளியிடக்கூட முடியவில்லை. அப்பாவின் வருகைக்காகக் காத்திருக்கின்ற பிள்ளைகள், தங்களுடைய பிள்ளைகளின் வருகைக்காகக் காத்திருக்கின்ற பெற்றோர்கள் முதலியோருடைய நிலைகளை இந்த அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்தும் சிறையில் இருக்கின்ற இந்தச் சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு இந்த அரசு என்ன திட்டத்தை வைத்திருக்கின்றது.   வெள்ளைக் கொடியோடு போன பலர் இன்னும் இந்த நாட்டிலே காணாமலே போயிருக்கின்றார்கள். அவர்களுக்காகப் பலமுறை பேசப்பட்டிருக்கின்றது, பலமுறை கேட்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் எங்கே என்றுகூட அவர்களுடைய பெற்றோர் பலமுறை கேட்டிருக்கின்றார்கள். 

இந்தப் பாராளுமன்றச் சபையில் கூட நான் ஏற்கனவே பலமுறை கேட்டிருக்கின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளுடைய அரசியல்துறையைச் சேர்ந்த பாலகுமாரும் அவருடைய மகனும் யுத்தம் முடிந்து  2009 ஆம் ஆண்டு அரச படைகளுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்ததை ‘‘லங்கா கார்டியன்‘‘ பத்திரிகை படத்தோடு செய்தியாக வெளியிட்டிருந்தது. அவர்களோடு எழிலனனையும்அவருடைய மனைவி இராணுவத்திடம் நேரடியாகக் கையளித்திருந்தார். இப்பொழுது எழிலனுடைய மனைவி வடக்கு மாகாண சபையினுடைய ஒரு கௌரவ உறுப்பினராக இருக்கின்றார். யோகரட்ணம் யோகியையும் புதுவை இரத்தினதுரையையும்  அவர்களுடைய மனைவிமார் இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். இவர்கள் ஒரு கண்கண்ட சாட்சியங்களாக இவர்களை ஒப்படைத்தும்கூட  அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதற்கு எந்தப் பதிலும் இதுவரை இந்த ஜனநாயக அரசினால் வழங்க முடியவில்லை. அதேபோல அரசியல்துறையைச் சேர்ந்த சோ. தங்கன், கரிகாலன், சக்தி, பிரியன், மஜீத், ராஜா போன்றவர்கள் பேபி சுப்பிரமணியம் என்கின்ற இளங்குமரன் போன்றவர்கள் குடும்பத்தோடு சரணடைந்திருக்கின்றார்கள். இவர்கள் தங்களுடைய மனைவி, பிள்ளைகளோடு சென்றிருக்கின்றார்கள். ராஜா தன்னுடைய மனைவி இல்லாமல் மூன்று குழந்தைகளோடு சரணடைந்திருக்கின்றார். இவ்வாறு சரணடைந்தவர்களுடைய பிள்ளைகள் எங்கே? இவர்களுடைய குடும்பம் எங்கே? இவர்களுடைய மனைவிமார் எங்கே? இவ்வாறு ஒரு தமிழ்ச் சமூகத்துக்கு நடந்திருக்கின்ற அநியாயங்களைக் கேட்பதற்குத் தமிழர்கள் ஒரு ஜனநாயக அரசில் உரிமை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்களைவிட நிர்வாகத்துறை அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளுடைய நிர்வாக சேவையைச் சேர்ந்த பூவண்ணன், இளஞ்சேரன், தங்கையா, குட்டி, விஜிதரன், நாகேஸ், உதயன், முரளி, மலரவன் ஆகியோரும் இவர்களோடு சேர்ந்து படைத்துறையைச் சேர்ந்த லோறன்ஸ், நாகேஸ், வீமன், பாஸ்கரன், மணியரசன், கல்வித்துறையைச் சேர்ந்த அருள் மாஸ்ரர், தாயகன், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த நரேன், ரவி, மருத்துவத்துறையைச் சேர்ந்த ரேகா, பொருண்மியத்துறையைச் சேர்ந்த சின்னன்ணை, பரப்புரைத் துறையைச் சேர்ந்த சஞ்சய், நிதித்துறையைச் சேர்ந்த ரூபன் ஏனைய துறைகளைச் சார்ந்த உத்தமன், கானகன் போன்றோரும் பிரான்சிஸ் பாதிரியாருடன் இராணுவத்திடம் சரணடைந்திருக்கின்றார்கள்.     

இப்பொழுது இவர்கள் எங்கே இருக்கிறார்கள்? பாதர் பிரான்சிஸுடன் சரணடைந்தவர்களின் நிலை என்ன? நாங்கள் இந்தச் சபையிலே இது தொடர்பாகப் பல தடவைகள் கேட்டிருக்கிறோம்.  இவற்றுக்கு இந்த அரசு எவ்வாறு விடை அளிக்கப்போகிறது?  இந்த உறுப்பினர்களுடைய காலங்கள், இவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள், இவர்களுக்கு என்ன நடந்திருக்கிறது? இவர்களை இந்த அரசு எவ்வாறு விடுதலை செய்யப்போகிறது?  இது ஒரு  ஜனநாயக அரசின் முடிவாக எவ்வாறு அமையும்?  தயவுசெய்து இந்த அரசாங்கம் இவற்றை வெளிப்படுத்த வேண்டும்.  இவர்களுக்கு என்ன நடந்தது? இதுவரைகாலமும் இவர்கள் தங்களிடம் சரணடைந்தார்களா இல்லையா?  இவர்களை இராணுவத்தினரிடம் கையளித்தமைக்கான கண்கண்ட சாட்சிகளாக  இவர்களுடைய மனைவிகள்  இருக்கின்றார்கள். அப்படியிருக்கும் பொழுது  நீங்கள் ஏன் இவர்களை விடுதலை செய்ய முடியாது.  இப்பொழுதும் பலர்  காணாமற்போகின்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 4 ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து ஒரு இளைஞன் கடத்தப்பட்டிருக்கின்றான்.  கடந்த ஆவணி மாதம் 13 ஆம் திகதி விநாசிஓடை என்னும் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயார் பச்சை உடை தரித்த மூன்று பேரால் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த மண்ணிலே பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.  நான்   ‘பச்சை உடை தரித்தோர்‘ என்று சொன்னதுக்காக பொலிஸாரால் எனது காரியாலயத்தில் வைத்து விசாரிக்கப்பட்டேன். ஆனால், இந்த மண்ணிலே காணாமற்போனோர் பற்றி நாங்கள் முறைப்பாடு எழுதிக்கொடுத்தால் அதுபற்றி விசாரணை செய்வதற்கு எவருமே இல்லை.     கடந்த 4 ஆம் திகதி இரவு எனது காரியாலயத்துக்குள் புகுந்த சிவில் உடைதரித்த 12 பொலிஸார் என்னை விசாரித்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் என்னை விசாரித்தார்கள்? எதற்காக எனது காரியாலயத்துக்கு வந்தார்கள்? என்று கேட்டால் அதற்குக் காரணம் சொல்வதற்கு இந்த நாட்டில் ஒருவருக்கும் அருகதை  இல்லாத நிலை காணப்படுகிறது.   

ஆனால், நாங்கள் ஒரு கருத்தைச் சொல்வதற்கு முதல் எங்களை  விசாரிப்பதற்காக  பொலிஸாரும் புலனாய்வாளர்களும்  எங்களுக்குப் பின்னால்  சுற்றித் திரிகிறார்கள்.     தமிழர்களுக்காகப் போராடியவர்கள், தமிழர்களுடைய இன விடுதலைக்காகப் போராடியவர்கள்  யாராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது. தமிழர்களின் தேசியப் பிரச்சினை விடயத்தில் இலங்கை அரசாங்கம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்று கொண்டிருக்கின்றது. இராணுவ அடக்குமுறையைக் கைவிட்டு அரசாங்கம் நீதி வழங்குமென எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கைகூட இன்று அடியோடு தகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப்போவதில்லை. அப்படி நம்பி ஏமாறுவதற்கு தமிழ் மக்களும் தயாராக இல்லை என்பதைத்தான் கடந்தகால வரலாறுகள் நிரூபித்திருக்கின்றன.    பூமிப் பந்திலே ஈழத் தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம், தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம், தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம். இந்த இனத்தினுடைய வரலாற்றில் நாங்கள் சிங்கள மக்களை நிராகரிக்கவில்லை, சிங்கள மக்களை எதிர்க்கவில்லை. இந்த மண்ணிலே நாங்களும் உங்களோடு ஒரு தேசமாக சமவுரிமையோடு வாழத்தான் விரும்புகின்றோம்.  அண்மையிலே ஜனாதிபதி  குறிப்பிட்டிருந்தார், தேர்தல்கள் இந்த நாட்டிலே நடைபெறுகின்றன, இங்கு ஜனநாயகம் இருக்கின்றது என்று. ஒரு நாட்டிலே தேர்தல் மட்டும் ஜனநாயகத்தைக் காட்டாது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் தேர்தல்களை நடத்த முடியும். எல்லாத் தேர்தல்களையும் நடத்துகின்றபொழுது அந்தத் தேர்தல்கள்தான் ஜனநாயகமாக இருந்தால்  இந்த நாடு எப்பொழுதோ மீட்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், வறுமை மேலோங்கியிருக்கின்றது, வேலையில்லாப் பிரச்சினை தாண்டவமாடுகின்றது. அதிலும் நீங்கள் பிரதேச ரீதியாகப் பாருங்கள்! வரவு  செலவுத் திட்ட உரையிலே ஜனாதிபதி சொல்கின்றார், இலங்கையிலே வறுமை பத்து வீதத்திலிருந்து ஆறு வீதமாகக் குறைக்கப்பட்டிருக்கின்றது என்று. இதனை நீங்கள் யாழ்ப்பாணப் பிரதேசமாக, வன்னிப் பிரதேசமாகப் பிரித்துப் பாருங்கள்! இங்கே வறுமை இருந்ததைவிட அதிகரித்திருக்கின்றது. வேலையில்லாப் பிரச்சினை இருந்ததைவிட அதிகரித்திருக்கின்றது. இங்கே என்ன வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, வறுமை என்பது பிரதேச ரீதியாகப் பார்க்கப்பட வேண்டும். ஆனால், ஒட்டுமொத்த இலங்கையை நீங்கள் பார்க்கின்றீர்கள்! ஆனால், தமிழர் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்களுக்கான அபிவிருத்தி, அவர்களுக்கான வேலைவாய்ப்புச் சூழல்கூட மாற்றங்கள் எதையும் காணவில்லை.    

கிளிநொச்சி மாவட்டத்தினுடைய பொன்னாவெளி என்கின்ற கிராமத்தில் 2,200 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை யாரோ சுற்றிவர அடையாளமிட்டு 300 அடி ஆழங்களுக்கு அந்தக் காணிகளை ஆய்வு செய்திருக்கின்றார்கள். அங்கே இருக்கின்ற கற்களைப் புத்தளத்திலே இருக்கின்ற ரோக்கியோ சீமெந்து ஆலைக்காக அவர்கள் கொண்டு வரப் போகின்றார்கள். அவர்கள் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு அங்கிருந்து கற்களை எடுக்கப் போகின்றார்கள். ஏற்கனவே பொன்னாவெளியிலே உப்புத் தண்ணீர் காரணமாக மக்கள் குடியேறி வாழ முடியவில்லை. ஆனால், அங்கு இவ்வாறு கற்கள் தோண்டப்பட்டால் அருகிலே இருக்கின்ற வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு, பாலாவி போன்ற கிராமங்களில் முழுமையாக இருக்க முடியாமல் மக்கள் இடம்பெயர்வார்கள். ஆகவே, இன்று இலங்கையிலே நடைபெறுவது ஒன்று தமிழ் மக்களுடைய சொந்த நிலங்களில் அவர்களுடைய உற்பத்தி செய்யக்கூடிய தொழில்வாய்ந்த நிலங்களில் அவர்களைக் குடியிருக்கவிடாமல் தடுப்பது,  தடுத்து அந்த இடங்களில் இருந்து அவர்களை வெளியேறச் செய்வது, இன்னொன்று அவர்களுடைய சொந்த நிலங்களிலிருந்து அவர்கள் தாங்களாகவே வெளியேறிப் போகக்கூடிய வகையில் அந்த இடங்களைக் கபளீகரம் செய்வது. அவ்வாறு செய்கின்றபோது ஓர் இனச் சுத்திகரிப்பு அங்கு மிகத் தெளிவாக மேற்கொள்ளப்படுகின்றது. ஏனென்றால் அங்கிருக்கின்ற மக்கள் தங்களுடைய இடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் அந்த இடங்களில் வாழ முடியாது.    ஆகவே, இவ்வாறு தொடர்ந்து சென்றவர்களுடைய நிலைமைகளும் இந்த நிலங்கள் பறிக்கப்படுவதும் ஒரு ண்tணூதஞிtதணூச்டூ ஞ்ஞுணணிஞிடிஞீஞு  கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு.  கலாசார ரீதியாக, மத ரீதியாக, நிலப் பறிப்பின் ஊடாக, பெண்களை இராணுவத்துக்குச் சேர்த்தல் ஊடாக, பெண்கள் மீதான வன்முறைகள் ஊடாக இது தொடர்ந்து இடம்பெறுகின்றது. இதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் மீண்டும் வரலாறு உங்களை வேறு திசைக்கு இட்டுச் செல்லும். ஆகவே, இலங்கை அரசு வரலாற்றைச் சரியாகப் புரிந்து வரலாற்றின் பாதையிலே நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் கூறி நிறைவு செய்கின்றேன். 

No comments:

Post a Comment