Saturday, December 14, 2013

காதலித்ததால் தூக்கு..!காதலுக்காக பறிக்கப்பட்ட உயிர்கள் வரிசையில் ரிபாத்தின் உயிரும் இணைந்து விட்டது. இனி சட்டம் தன் கடமையை செய்யும்.

ரிபாத் யூசுப் 18 வயதான இளைஞர் குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல பிரதேசத்தை அண்மித்த பண்டாரகொஸ்வத்த மடிகே மிதியால பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஒரு சகோதரி நான்கு சகோதரர்களைக் கொண்ட ரிபாத் குடும்பத்தின் கடைக்குட்டி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை வரை கற்றலை மேற்கொண்டிருந்த ரிபாத் பின்னர் சந்தை வர்த்தகத்தை தேர்ந்தெடுத்து அந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்தார்.இந்நிலையில் 18 வயது இளைஞன் என்ற வகையில் ரிபாத்துக்கு ஒரு காதலியும் இருந்தார். பொதுவாக வீட்டாருக்கு தெரியாமல் இளைஞர், யுவதிகள் தொடர்ந்து வரும் காதல் தொடர்பை ஒத்த தொடர்பே அது. எனினும் ரிபாத் பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) காதல் தொடர்பை மடிகே மிதியால பிரதேசமே அறிந்திருந்தது எனலாம். ஊரே அறியும் போது அதனை இரு வீட்டாரும் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.எனினும் இரு வீட்டாரும் இது தொடர்பில் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டதாக அறிய முடியவில்லை.அன்று ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி வடமேல் மாகாண சபை தேர்தலுக்கான பிரசார காலம்.தயார் செய்த இரவு உணவான ரொட்டியையும் இறைச்சிக் கறியையும் உட்கொண்ட ரிபாத், பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கு செல்லவே பெற்றோரிடமிருந்து அந்த இரவு வேளையில் விடை பெற்றுள்ளார். தான் நிரந்தரமாக விடைபெறப் போவதை அறியாமல்.தனது உறவு முறை சகோதரர் ஒருவரையும் மைத்துனர் ஒருவரினதும் துணையுடன் சென்ற ரிபாத் தேர்தல் பிரசார கூட்டத்தின் இடை நடுவிலேயே வீடு நோக்கி பயணிக்கலானார்.
 
வரும் வழியே உடன் சகோதரன் மைத்துனருடன் ஜஸ்கிறீம் சாப்பிட்டவாறு சிரித்து கதைத்துக் கொண்டு வந்த ரிபாத்தின் கையடக்கத் தொலைபேசி சிணுங்கவே ரிபாத் தனியானார். உடன் வந்த சகோதரரும் மைத்துனரும் சற்று முன்னே நடக்க ரிபாத் தொலைபேசியில் உரையாடியவாறு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அது காதலியிடம் இருந்து வந்த அழைப்பு என்பதை நான் எழுத வேண்டியதில்லை. மைத்துனருக்கும் சகோதரருக்கும் விடை கொடுத்த ரிபாத் ஐஸ்கிறீம் கொள்வனவு செய்தவனாய் தன்னை அழைத்த காதலியை காண எவரும் அறியாவண்ணம் காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.காதலியின் அறை ஜன்னல் வழியாக ரிபாத்தும் காதலி பாத்திமாவும் காதல் மொழி பேசிக் கொண்டிருந்துள்ளனர்.இந்நிலையில் அதிகாலை தொழுகைக்காக எழுந்த ரிபாத்தின் தந்தை இரவு நேரம் பிரசாரக் கூட்டத்துக்கு சென்ற தனது மகன் வீடு வந்து சேராததை அவதானித்துள்ளார். இரவு 10 மணிக்குள் எங்கு சென்றிருப்பினும் வீடுவந்து சேரும் பழக்கமுடைய ரிபாத் அதுவரை வீடு வந்து சேராமையை அடுத்து தந்தை கலக்கமுற்றுள்ளார்.
 
பின்னர் ரிபாத்தின் சகோதரரின் அறையையும் பார்வையிட்ட தந்தை ரிபாத் எங்கே? என வினவினார். எனினும் ரிபாத் வரவில்லை என சகோதரர் பதிலளிக்க, பிரசார கூட்டத்தை காணச் சென்ற உறவு முறை சகோதரரையும் மைத்துனரையும் தொடர்பு கொள்ள அவர்களோ ரிபாத் வீடு வந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்நிலையில் ரிபாத்தின் தந்தை தனது மகனின் கையடக்கத் தொலைபேசியை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அது செயலிழந்திருந்தது. இரு கையடக்கத் தொலைபேசிகளை ரிபாத் பயன்படுத்தி வந்த போதும் அவை இரண்டுமே செயலிழந்திருந்தன.இதனால் மேலும் அச்சம் கொண்ட ரிபாத்தின் தந்தை ரிபாத்தின் சகோதரர்களின் உதவியுடன் ரிபாத்தின் நண்பர்களை தொடர்பு கொள்ள அவர்களோ தமக்கு தெரியாது என்ற பதிலையே விடையாகக் கொடுத்தனர்.இந்நிலையில் அந்த அதிகாலைப் பொழுதில் ரிபாத்தின் சகோதரர் தனது மோட்டார் சைக்கிளில் ரிபாத்தின் நண்பர்களின் வீடுகளை நோக்கி சென்று தனது இளைய சகோதரன் குறித்து விசாரித்து ஏமாற்றமடைந்தவராய் உறவு முறை சகோதரர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு களைத்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ரிபாத்தின் வீட்டுக்கு பிரதான பாதை வழியாக செல்வதை விட மடிகே மிதியால மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானமூடாக செல்வது இலகுவானதாகும். இந்நிலையில் பாடசாலையூடான அந்த வழியை பலரும் பயன்படுத்தி வந்தனர். அதனூடாக மோட்டார் சைக்கிளை செலுத்திய ரிபாத்தின் சகோதரரும் மற்றைய நபரும் கண்ட காட்சி அவர்களின் இரத்தத்தை உறையச் செய்தது.
 
இரவு வேளையில் பிரசார கூட்டத்தை காணச் சென்ற ரிபாத் பாடசாலை கட்டிடமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்ட அவ்விருவரும் அலறியடித்துச் சென்று தூக்கிலிருந்து இறக்கி காப்பாற்ற முனைந்தனர். எனினும் அப்போது ரிபாத்தோ இவ்வுலகிற்கு விடை கொடுத்து பல மணி நேரங்கள் கடந்திருந்தது.அப்போது நேரம் காலை 6.30 மணியிருக்கும் பாடசாலை கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ரிபாத்தின் சடலம் மீட்கப்பட்ட செய்தி காட்டுத் தீயாய் ஊரெங்கும் பரவியது. ஊரார் பாடசாலை நோக்கி படையெடுக்க தகவலானது வாரியபொல பொலிஸாருக்கும் மிதியால பிரதேசத்தின் திடீர் மரண பரிசோதகருக்கும் சென்றடைந்தது. இந்நிலையில் அவர்களும் ஸ்தலத்துக்கு விரைய தூக்கிலிருந்த சடலம் மீட்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டது.
 
பின்னர் வாரியபொல பொலிஸாரும் திடீர் மரண விசாரணை அதிகாரியினதும் தீர்ப்புகளுக்கமைய ரிபாத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறி சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடயம் நிறைவுக்கு வந்ததாய் கொள்ளப்பட்டது.இந் நிலையில் அன்றைய தினமே ரிபாத்தின் ஜனாஸா நல்லடக்கமும் இடம்பெற்ற நிலையில் ரிபாத்தின் மரணத்தில் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.தனது மகனின் மரணத்தில் சந்தேகமுள்ளதாகவும் வாரியபொல பொலிஸார் கூறுவதைப் போன்று தற்கொலை செய்து கொள்ள தனது மகனுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் குறிப்பிட்டு அது தொடர்பில் விசாரணை நடத்தக் கோரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குருநாகலை பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு ரிபாத்தின் குடும்பத்தினரால் முறைப்பாடளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து குறித்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு விசாரணை நடத்தும் பொறுப்பு குளியாப்பிட்டி பிராந்தியத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோவின் கீழ் பிங்கிரிய பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி எச்.எம்.பாலித்த ஹேரத் சார்ஜன் குணவர்த்தன மற்றும் கான்ஸ்டபிள்களான சில்வா தர்மபால நிஹால் உள்ளிட்ட விஷேட குற்றவியல் பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்தது.கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைகளை முன்னெடுத்த இந்த பொலிஸ் குழு ரிபாத்தின் மரணம் தற்கொலை அல்ல ஒரு மனிதப் படுகொலை என்பதை கண்டறிந்துள்ளது.
 
விசாரணைகளை பொறுப்பேற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ யாரும் இணங்காணா வண்ணம் மடிகே மிதியாலை பிரதேசத்துக்கு மாறு வேடத்தில் பொலிஸாரை அனுப்பி தகவல் சேகரிக்கலானார். அதன் பிரதிபலனாகவே மறைக்கப்பட இருந்த ஒரு மனிதப் படுகொலை தொடர்பான விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.இந்நிலையில் ரிபாத் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டிய பொலிஸார் அவர் யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.தொலைபேசி குரல் பதிவுகள் உள்ளிட்ட பல தகவல்களை சேகரித்திருந்த விசாரணை குழு பொதுவாக தற்கொலை விவகாரம் எனில் கூறப்படும் காரணங்களில் காதல் விவகாரம் தொடர்பிலும் தேடியது. இதன் போது இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் காதலியின் சகோதரனால் தாக்கப்பட்டமை தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வந்தமை தொடர்பான தகவல்களும் பொலிஸாருக்கு கிடைத்தன.
 
இதனைவிட உறுதியான சான்றுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து ரிபாத்தை தூக்கிட்டு கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ரிபாத்தின் காதலியின் தந்தையான அமீர்தீன் ஸாதிகீன் சகோதரர் மொஹமட் ஸாதிகீன் மொஹம்மட் யாஸீம் மற்றும் பும்மன்ன பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என கருதப்படும் இப்ராலெப்பே அன்ஸார் ஆகிய மூவரையும் விஷேட குற்றவியல் பொலிஸ் குழு கைது செய்தது.நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட விஷேட தடுப்புக் காவல் உத்தரவுக்கமைய இவர்களை பொலிஸார் விசாரித்து வந்த நிலையில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.இந் நிலையில் கடந்த சனியன்று வாரியபொல நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ. எஸ். கே. பாலபெட்டபெத்தியின் உத்தரவுக்கமைய அவரின் முன்னிலையில் ரிபாத்தின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.சுமார் 3 மாதங்களின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டது.கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் சட்ட வைத்திய அதிகாரிகளின் பூரண வழி நடத்தலின் கீழ் தோண்டி எடுக்கப்பட்ட ரிபாத்தின் 5 அடி 4 அங்குலம் கொண்ட சடலமானது இன்று விஷேட பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
 
உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பியசிறி பெர்னாண்டோ தலைமையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் காதலியின் அழைப்பின் பேரில் ரிபாத் அங்கு சென்றுள்ளதாகவும் அதன் போது காதலியின் தந்தை சகோதரன் மற்றுமொரு நபரால் அவர் பலமாக தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளதுடன் அது தொடர்பில் சந்தேக நபரிடம் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ரிபாத் காதலியுடன் 23ஆம் திகதி இரவு வெகுநேரம் கதைத்ததை உறுதி செய்த பொலிஸார் ரிபாத்தின் காதலியிடமும் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.ரிபாத்தின் மரணம் அல்லது ரிபாத் தாக்கப்பட்டதை காதலி அறிந்திருப்பதாக சந்தேகிக்கும் பொலிஸார் அவர் அதனை மட்டும் மறைப்பதாக குறிப்பிடுகின்றனர்.எவ்வாறாயினும் ரிபாத்தை சந்தேக நபர்கள் தாக்குவதை அவதானித்த நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக குறிப்பிட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ குறித்த இளைஞனை அடித்து மயக்கமடையச் செய்துள்ள நிலையில் அதன் பின்னர் மிதியால மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் பின்னால் மண்டபத்தில் உள்ள 12ஆம் வகுப்பை ஒட்டியுள்ள தகரக் கொட்டிலின் கூரைப் பலகையில் தூக்கிலிட்டு கொலை செய்துள்ளதாக சுட்டிக் காட்டுகிறார்.
 
இவ்வாறு தூக்கிலிட பாடசாலை கிணற்று வாளி கயிற்றை பயன்படுத்தியுள்ளதாக கூறும் பொலிஸார் அக்கயிறு கட்டப்பட்டிருந்த கிணற்று வாளியையும் ரிபாத்தின் இரு கையடக்கத் தொலைபேசிகளையும் இதுவரை காணவில்லை என குறிப்பிடுகின்றனர்.அத்துடன் ரிபாத்தின் கழுத்தில் போடப்பட்டிருந்த கயிறு முடிச்சும் இது கொலை என்பதை பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டும் விசாரணைக் குழு சந்தேக நபர்களின் தொழில் முறைமைகளுடன் ஒப்பிட்டு அம்முடிச்சு தொடர்பில் பொதுமக்கள் முன்வைக்கும் சந்தேகமும் மறுப்பதற்கில்லை என்கின்றனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.காதலித்ததற்காக தூக்கிட்டு  செய்யப்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ள இந்த கொலை தொடர்பான செய்தி முழு பிரதேசத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில் மறைக்கப்பட்டு இருந்த இந்த கொலை தொடர்பில் மர்மங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். காதலுக்காக பறிக்கப்பட்ட உயிர்கள் வரிசையில் ரிபாத்தின் உயிரும் இணைந்து விட்டது. இனி சட்டம் தன் கடமையை செய்யும்.

No comments:

Post a Comment