Saturday, November 9, 2013


உலக மேடையில் தனது பிம்பத்தை பெருப்பித்துக் காட்டுவதற்காக,  ஒரு பிரமாண்டமான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது...இலங்கை அரசாங்கம், உலக மேடையில் தனது பிம்பத்தை பெருப்பித்துக் காட்டுவதற்காக, நவம்பர் 15-17 நடக்கவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டுக்காக ஒரு பிரமாண்டமான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது. மாநாட்டுக்கான மொத்தச் செலவு பற்றி கேட்டபோது, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: நாங்கள் மாநாட்டுக்கு என்ன செலவு செய்கின்றோம் எனக் கேட்க வேண்டாம். இந்தச் செலவுகளை, அதிகளவான உள் வருகைக்கான முதலீடாக காண வேண்டும். பொதுநலவாய மாநாட்டின் பின்னர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநலவாயத் தலைவராக இருப்பார். 52 முன்னாள் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கங்களின் தலைவர்கள், தமது பழைய எஜமானர்களுடன் பங்குபற்றும் இந்த மாநாடு, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் திணிக்கும் அழுத்தங்களை குறைக்க உதவும் என்று அவர் கணக்கிடுகின்றார். இந்த மாநாடு வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் என்றும் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக தனது அரசாங்கத்தை பலப்படுத்தும் என்றும் அவர் எதிர்பார்க்கின்றார். ராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இராணுவத்தால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்ற விவகாரங்கள் முன்னணிக்கு வருவதைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கின்றார். ஐ.நா. நிபுணர்கள் குழு ஒன்று, 2009 மே மாதம் யுத்தம் முடிவடையும் வரையான மாதங்களில் இராணுவத்தினால் குறைந்தபட்சம் 40,000 பேர், பிரதானமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது

அப்போதிருந்தே அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் பிரமாண்டமான இராணுவ ஆக்கிரமிப்பை முன்னெடுத்து வருவதோடு, அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு பூராவும் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்காக பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்படுத்துகின்றது. பிரித்தானியா, கனடா, ஆவுஸ்திரேலியா மற்றும் இந்தியா உட்பட பொதுநலவாய நாடுகள், ராஜபக்ஷ வின் யுத்தத்தை முழுமையாக ஆதரித்தன. இந்த நாடுகள் புலிகளை தடை செய்ததோடு அதன் நிதிகளையும் தடுத்தன. ராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு இந்தியாவும் பிரித்தானியாவும் இராணுவ மற்றும் தளபாட உதவிகளை கொடுத்தன. இப்போது அவை விமர்சனங்களை எழுப்புவதோடு இந்த ஆண்டு முற்பகுதியில், இலங்கையில் மனித உரிமைக மீறல்கள் சம்பந்தமாக மட்டுப்படுத்தப்பட்ட விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்து அமெரிக்க அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்த ஆண்டு முற்பகுதியில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு வாக்களித்தனர். இந்த நாடுகளோ அல்லது அமெரிக்காவோ, இலங்கையில் தமிழர்கள் உட்பட மக்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக, அல்லது யுத்தத்தின் போது இராணுவம் மேற்கொண்ட அட்டூழியங்கள் சம்பந்தமாக அக்கறை காட்டவில்லை. மாறாக, சீனாவுடனான தனது உறவுகளை மட்டுப்படுத்துமாறு ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த விவகாரத்தை சிடுமூஞ்சித்தனமாக சுரண்டிக்கொள்கின்றன. கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், மனித உரிமைகள் பிரச்சினையை இலங்கை அணுகாத காரணத்தால் பொதுதநலவாய மாநாட்டில் தான் பங்குபற்றப் போவதில்லை என பாசாங்குத்தனமாக அறிவித்தார். அமெரிக்காவைப் போல், கனடாவும் ஆப்கானிஸ்தானில் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பின் பங்காளியாகவும், அங்கு நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றங்களையும் மேற்கொள்வதை வழமையாகக் கொண்டுள்ளன. ராஜபக்ஷவை நெருக்கும் வாஷிங்டனின் முயற்சிகளுடன் அணிசேர்ந்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புகள் முன்னிலைப்படுத்தும் இந்த பகிஷ்கரிப்பு பிரசாரத்தை தூக்கிப் பிடிப்பதற்காக ஹார்ப்பரின் நிராகரிப்பு பயன்படுத்தப்படுகின்றது. பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் கூட பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுக்கின்றன. அவர்கள் தமிழ் தட்டுக்களின் சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வுக்காக சர்வதேச ஆதரவை எதிர்பார்க்கின்றனர். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், தான் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதோடு இலங்கை அரசாங்கத்திடம் மனித உரிமை பிரச்சினைகளை எழுப்புவதற்கான ஒரு சபையாக அதைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

உண்மையில், கொழும்பிலும் தெற்காசியாவிலும் தனது அரசியல் செல்வாக்கை பெருகச் செய்யவும் வர்த்தக வாய்ப்புகளை பெருகச் செய்யவும் இந்த மாநாட்டைப் பயன்படுத்திக்கொள்ள பிரிட்டிஷ் எதிர்பார்க்கின்றது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டுக்கு வருகை தருவதை உறுதிப்படுத்துவதில் ஜனாதிபதி ராஜபக்ஷ ஏங்குகின்றார். அவர் வருகை தர மறுக்கின்றமை, புது டில்லுக்கும் கொழும்புக்கும் இடையில் ஏற்கனவே சிக்கலில் உள்ள உறவுகளை மோசமாக்கக் கூடும். நாட்டின் பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் உடன்படிக்கையை எட்டுமாறு சிங் இலங்கை அரசாங்கத்தை நெருக்கி வருகின்றார். இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் முறை தொடர்பாக பரந்த வெகுஜன எதிர்ப்பு காணப்படும் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள், பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்குமாறு கோரும் நெருக்குவாரத்துக்கு  சிங் முகங்கொடுக்கின்றார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. கருணாநிதிக்கு அண்மையில் பதில் அழித்த சிங், பொதுநலவாய மாநாட்டில் எனது பங்குபற்றல் சம்பந்தமான விடயம், உங்கள் கட்சியினதும் மற்றும் தமிழ் மக்களதும் உணர்வுகள் உட்பட, அது சம்பந்தமான அனைத்து காரணிகளையும் கவனத்தில் எடுத்த பின்னரே தீர்மானிக்கப்படும் என அறிவித்தார். இந்திய ஸ்தாபனத்தின் தட்டுக்கள், மாநாட்டில் பங்குபற்றி இந்தியாவின் நலன்களை வலியுறுத்துவதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்துமாறு சிங்குக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்தியா பங்குபற்றுவதானது தீவின் மக்கள் சம்பந்தமாக மட்டுமன்றி, அதன் தமிழ் சிறுபான்மை சமுதாயம் சம்பந்தமாகவும் இந்தியாவின் அர்ப்பணிப்பை பிரதிபலித்து, ஒரு பிராந்திய சக்தியாக இந்தியாவின் நிலையை பலப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சின் அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்ததாக டைம்ஸ் ஒஃப் இந்தியா மேற்கோள் காட்சியிருந்தது. அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டும் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுகின்றார். தொழிற் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியுமாக ஆட்சியில் இருந்த ஆவுஸ்திரேலிய அரசாங்கங்கள், தீவில் இருந்து அகதிகள் வெளியேறுவதை தடுக்கவும் மற்றும் அவர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதற்கான தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதை தடுக்கவும் இலங்கை அரசாங்கத்துடனும் அதன் பாதுகாப்புப் படைகளுடனும் நெருக்கமான உறவுகளை அமைத்துக்கொண்டுள்ளன. தற்போதைய கூட்டணி அரசாங்கம், சீனாவுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ள ஆசியாவில் ஒபாமா நிர்வாகத்தின் இராணுவக் கட்டியெழுப்பல்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கின்றது. முந்தைய தொழிற் கட்சி அரசாங்கத்தின் கீழ், அமெரிக்க இராணுவம் அவுஸ்திரேலியத் தளங்களில் பெரும் வசதிகளைப் பெற்றுள்ளது. அபோட், சீனாவிடம் இருந்து இலங்கையை தூர விலகச் செய்ய ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுப்பதன் பேரில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

ராஜபக்ஷ அரசாங்கம், இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏங்குவதோடு, நாட்டின் வரிச் சலுகைகள், மலிவு உழைப்பு மற்றும் கட்டிட நிர்மாணத்துறைக்கான ஒரு காட்சியகமாக பொதுநலவாய மாநாட்டில் ஒரு தொகை வர்த்தக சந்திப்புகளையும் திட்டமிட்டுள்ளது.  அரசாங்கம் 2013ல் 2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை எதிர்பார்த்து திட்டமிட்டிருந்தாலும், ஆண்டின் முதல் அரைப் பகுதியில் 537 மில்லியன் டாலர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள பல்வேறு பொதுநலவாய நாடுகளின் கோடிக்கணக்கான வறிய மக்களின் தலைவிதி தொடர்பாக மாநாட்டில் வாய்மூல வாக்குறுதிகள் கொடுக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. எவ்வாறெனினும், பிரிட்டனிடம் இருந்து உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்றதில் இருந்தே, இந்த நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் வறுமை என்ற காலனித்துவ வழிப்பெற்ற பேறில் இருந்து வெளிவருவதில் முற்றிலும் இலாயக்கற்றவை என்பதையும் அவற்றின் ஜனநாயகவிரோத ஆட்சியையும் நிரூபித்துள்ளன. ராஜபக்ஷ, தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் வாழ்க்கைத் தரத்தை அவரது அரசாங்கம் ஆழமாக சீரழிப்பதற்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் சீற்றத்தையும் எதிர்ப்பையும் திசை திருப்புவதற்கான இன்னொரு அரசியல் திசைதிருப்பலாக இந்த மாநாட்டை பயன்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கின்றார். ஜனாதிபதி, தொலைக் காட்சியில் தோன்றி பெருமை பேசுவதற்காக சில பிரசித்திபெற்ற நட்சத்திர நடிகர்களை பட்டியலிட்டுள்ளார். நாட்டின் அரச தலைவர் பொதுநலவாய நாடுகளின் தலைவராக பொறுப்பேற்கும் நாள் எங்களுக்கு எந்தளவுக்கு பெருமைக்குரியது! என அவர்கள் தெரிவிக்கின்றனர். அடிக்கடி ஏகாதிபத்தியவிரோத தோரணையைக் காட்டு ராஜபக்ஷவுக்கு, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மிச்சசொச்சத்துக்கு தலைமைத்துவத்தை பெறுவதில் ஐயமும் கிடையாது என்பது தெளிவானது.  

No comments:

Post a Comment