Thursday, November 14, 2013


1987 இல் கையெழுத்தான ஜெயவர்தன  ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தின்படி 13 ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை இன்னும் கொண்டு வரவில்லை.கொமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு பிரதமர் போகவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போகிறார். இதிலென்ன பெரிய ராஜதந்திரமோ, ராஜபக்ஷ அரசுக்கு எதிரான கண்டனமோ இருக்கிறது என்பது தெரியவில்லை. பிற மாநிலப் பத்திரிகைகள் பிரதமரும் மத்திய அரசும் தமிழக அரசியல் கட்சிகளின் பயமுறுத்தலுக்கு அடிபணிந்து விட்டதாகவும், மாநிலத்தின் வற்புறுத்தலுக்காக தேசிய நலன் பலி கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கின்றன. இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு. மாநில உணர்வுகளை மதித்துதான் மத்திய அரசு செயல்பட்டாக வேண்டும். அதனால், தமிழக அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலுக்கு மத்திய அரசு அடிபணிந்து விட்டது என்கிற குற்றச்சாட்டில் அர்த்தம் இல்லை. எல்லா பிரதமர்களும் எல்லா காமன்வெல்த் மாநாடுகளுக்கும் போவதில்லை. பிரதமரே கலந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இதற்கு முன்  2011இல் நடந்த கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. துணை ஜனாதிபதி தான் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் நியூசிலாந்துப் பிரதமரும் கலந்து கொள்ளவில்லை. 

அதனால் பிரதமர் கலந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல. 1987 இல் கையெழுத்தான ஜெயவர்தன  ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தின்படி 13 ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை இன்னும் கொண்டு வரவில்லை. எந்தவித அதிகாரப் பகிர்வுக்கும் இலங்கை தயாராகவும் இல்லை. இப்போது இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் நடைபெற்று அங்கே தமிழர்களின் கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் நிலைமை. அதனால், வடக்கு மாகாண அரசுக்கு கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுத் தரவேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு. 1976 இல் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்குப் பிறகு இலங்கையில் நடக்க இருக்கும் பெரிய சர்வதேச நிகழ்வு கொமன்வெல்த் மாநாடுதான். இந்த இடைவெளியில் அங்கே எந்தவொரு சர்வதேச நிகழ்வும் நடைபெறாமல் இருந்ததற்குக் காரணம், அங்கிருந்த அரசியல் சூழல். இப்போது, இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டி, இலங்கையில் எல்லாமே சகஜநிலைக்குத் திரும்பிவிட்டன என்று காட்ட முற்படுகிறது ராஜபக்ஷ அரசு. கொமன்வெல்த் மாநாடு வெற்றிகரமாக நடப்பது ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும், அவரது அரசுக்கும் ஒரு கௌரவப் பிரச்சினை. அதை பயன்படுத்தி, 13 ஆவது சட்டத்திருத்தம் கொண்டு வர முடிந்திருந்தால், அதை இந்தியாவின் வெற்றியாகக் கொள்ள முடியும். 13 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் கிடைக்கும் அதிகாரப் பகிர்வுக்குப் பிறகு கொமன்வெல்த் மாநாட்டையொட்டி மாநில சுய உரிமையுடன் கூடிய வடக்கு மாகாணத்திற்கும் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்திருந்தால், அது நமது இராஜதந்திர வெற்றியாக இருந்திருக்கும். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் கரத்தை பலப்படுத்துவதாகவும், அங்கே வாழும் தமிழர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் அமைந்திருக்கும். மத்திய அரசின் அணுகுமுறையில் அப்படியெல்லாம் எந்தவொரு சிந்தனையும் இருந்ததாகவோ, இருப்பதாகவோ தெரியவில்லை. 

குறைந்தபட்சம், பிரதமர் தமிழக முதல்வரை அழைத்துக் கலந்து பேசி ஒரு முடிவெடுத்திருந்தால், தமிழகக் கட்சிகளை எல்லாம் அழைத்துப் பேசி முடிவெடுத்திருந்தால்கூட, கொமன்வெல்த் மாநாட்டை வட இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த பயன்படுத்தி இருக்க முடியும். இலங்கையில் போர் நடந்த போது, பதவி சுகத்துக்காக, இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தவர்கள்; அப்போது ராஜபக்ஷ அரசுக்கு இராணுவ ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் உதவ முற்பட்டவர்கள்; கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றத்தைப் பார்த்தும் பார்க்காமல் இருந்தவர்கள் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றுதான். சீனாவுடனான இலங்கையின் நட்புறவு அதிகரித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்று அச்சப்படுவோர், இனப்படுகொலை நடக்கும்போது யோசித்திருக்க வேண்டும் அதை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்... இலங்கையில் நடந்த இனப் படுகொலையைப் பற்றிப் பேசாமல், 13 ஆவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வற்புறுத்தாமல், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் ஏதோ தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுபோல ஒரு நாடகத்தை அரங்கேற்றி, பிரதமர் மன்மோகன்  சிங்  ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கேட்காத குறையாக, தான் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாததற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். மாநாட்டில் இந்தியா கலந்து கொள்கிறது, ஆனால், பிரதமர் கலந்து கொள்ளவில்லை. புரிகிறதா சூட்சுமம் ?    ராஜபக்ஷவின் இராஜதந்திரம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது!

No comments:

Post a Comment